காஞ்சிப் புராணம்

திருச்சிற்றம்பலம்


திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்
பரசமய கோளரியைப் பாலறா வாயனைப் பூம்பழனம் சூழ்ந்த
சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத் தேயமெல்லாம்
குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்கள் குலதீபத்தை
விரவியெமை ஆளுடைய வென்றிமழ இளங்களிற்றை விரும்பி வாழ்வாம். (கா.பு 10)

திருநாவுக்கரசு நாயனார்
இடையறாப் பேரன்பும் மழைவாரும் இணைவிழியும் உழவாரத் தின்
படையறாத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும்
நடையறாப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகைதன் ஞானப் பாடல்
தொடையறாச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும் துதித்து வாழ்வாம். (கா.பு 11)

சுந்தரமூர்த்தி நாயனார்
ஒருமணத்தைச் சிதைவுச் செய்து வல்வழக்கிட் டாட்கொண்ட உவனைக்கொண்டே
இருமணத்தைக் கொண்டருளிப் பணிகொண்ட வல்லாளன் எல்லாம் உய்யப்
பெருமணச்சீர்த் திருத்தொண்டத் தொகை விரித்த பேரருளின் பெருமாள் என்றுந்
திருமணக்கோ லப்பெருமாள் மறைப்பெறுமாள் எமதுகுல தெய்வமாமால். (கா.பு 12)

மாணிக்க சுவாமிகள்
பெருந்துறையிற் சிவபெருமான் அருளுதலும் பெருங்கருணைப் பெற்றி நோக்கிக்
கரைந்துகரைந் திருகண்ணீர் மழைவாரத் துற்றியநிலை கடந்து போந்து
திருந்துபெருஞ் சிவபோகக் கொழுந்தேறல் வாய்மடுத்துத் தேக்கிச் செம்மாந்
திருத்தருளும் பெருங்கீர்த்தி வாதவூர டிகளடி யிணைகள் போற்றி. (கா.பு 13)

சேக்கிழார் நாயனார்
தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
வாக்கி னாற்சொல்ல வல்லபிரா னெங்கள்
பாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ்
சேக்கி ழானடி சென்னி யிருத்துவாம். (கா.பு 15)

பஞ்சாக்கர தேசிகர்
கயிலாய பரம்பரையிற் சிவஞான போதநெறி காட்டும் வெண்ணெய்
பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பானுவாகிக்
குயிலாரும் பொழில்திருவா வடுதுறைவாழ் குருநமச்சி வாயதேவன்
சயிலாதி மரபுடையோன் திருமரபு நீடூழி தழைக்க மாதோ. (கா.பு 17)

நால்வர் பொற்றாள் துதி
சைவத்தின் மேற் சமயம் வேறில்லை அதிற்சார் சிவமாம்
தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறை செம்பொருள்
வாய்மை வைத்தசீர்த் திருத்தேவாரமும் திருவாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே.

திருச்சிற்றம்பலம்