பெரியபுராணத்தில் இருவர் ...

1. இருவர் தாங்கள் பெயர்களுடன் ‘தொண்டர்’ என்ற சொல்லைச் சேர்த்துக்கொண்டவர்கள்.

2. இருவர் தாங்கள் பாடல்களுக்கு இறைவரால் அடியெடுத்துக் கொடுக்கப் பெற்றவர்கள் : சேக்கிழார் பெரியபுராணம் பாடுவதற்கு “உலகெலாம்” என, தில்லைச் சிற்றம்பலவனால் அடியெடுத்துக் கொடுக்கப் பெற்றார். சுந்தரமூர்த்தி நாயனார், திருவாரூர் தேவாசிரிய மணடபத்தில் இருந்த தொண்டர்களின் பெருமையைப் பாடித் தம் அடிமைத் திறத்தைப் பாட உற்றிடம் கொண்டார். “தில்லைவாழ் அந்தணர் தம்” என்று அடியெடுத்துக் கொடுக்கப் பெற்றார்.

3. இருவர் சிவவேடம் தாங்கி, பெரியபுராணம் போற்றும் நாயன்மார் இருவரைக் கொன்றனர். முத்தநாதன் என்பவன் மெய்ப்பொருள் நாயனாரை வஞ்சனையால் கொன்றான். அரசர்க்குப் போர்த்தொழில் பயிற்றும் அதிசூரன் என்பான், ஏனாதிநாதர் என்னும் சிவபத்தனைப் போருக்கு அழைத்து, தன் நெற்றியில் உள்ள வீபூதியைக் காட்டிக் கொன்றான்.

4. அரசர்க்கு முதலமைச்சர்களாக இருந்த இருவர், அப்பதவியைத் துறந்து, சிவதொண்டு செய்தார்கள். தென்னவர் பிரமராயன் என்னும் திருவாதவூரடிகள், அரிமர்த்தன பாண்டியனுக்கு முதலமைச்சராக இருந்தவர். தம் கடமையாக குதிரை வாங்கச் சென்ற அவர், திருப்பெருந்துறையிலே குருவடிவில் இருந்த சிவபெருமானிடம் உபதேசம் பெற்றுச் சிவத்தொண்டர் ஆயினார். உத்தமசோழப் பல்லவன் என்ற சேக்கிழார், அநபாயச் சோழன் விரும்பியபடி சிவதொண்டர்களின் சீர் பாடி, ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்று அச்சோழரால் சிறப்பிக்கப் பெற்றவர்.

5. பெரியபுராணத் தொண்டர்களுள் இருவர் அரிசனர்கள். இருவரும் அந்தணர்களால், ‘ஐயரே’ என விழிக்கப்பட்டுச் சிறப்பிக்கப் படுகிறவர். சம்பந்தராலே, திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும்,தில்லைவாழ் அந்தணர்களாலே திருநாளைப்போவாரும் சிறப்பிக்கப் படுகிறார்கள்.